Sunday 2 August 2015

பஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013

எனக்கு பொதுவாக அபிஅப்பாவின் திமுக சித்தாந்தம் பிடிக்கவே பிடிக்காது. அவரிடமே பல முறை என் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறேன். பல சம்பவங்களை பூசி மெழுகி திமுகவுக்கு சப்போர்ட் பண்ணும் போது அப்படியே அவரை கடல்ல தூக்கிப் போடும் அளவுக்கு கோவமும் வந்ததுண்டு.

ஆனால் அவரின் வாழ்வியல் கட்டுரைகள், நான் அவரை வணங்க காரணம். நான் பதிவுலகிற்கு வரும்போது பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. நான் கிறுக்கினதை நாலுபேர் படிக்க வேண்டும். அவ்வளவு தான், அதுவும் சில சமயங்களில் என்ன எழுதுவது என்று கூட தெரியாமல் பல கட்டுரைகளை காப்பியடித்து இருக்கிறேன்.

ஆனால் அபிஅப்பாவின் கட்டுரைகளை படித்த பின்பு தான், நான் எதுவாக ஆக வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அவருக்கே தெரியாமல் அவரின் பல கட்டுரைகளை சுட்டு என்னுடையதாக பல மாற்றங்களுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

அவரின் பல கட்டுரைகளை எத்தனை முறை படித்து இருப்பேன் என எனக்கே தெரியாது. அதுவும் அந்த ரவா தோசை மேட்டர், விமானத்தில் நம்பர் எழுதிய அப்பாவியை கலாய்த்தது, கேஎப்சியில் போய் சாப்பிட்டது, இன்னும் பல கட்டுரைகள்.

அதிலும் முக்கியமாக போஸ்டர் ஒட்டுவது எப்படி என்ற அவரது முதல் கட்டுரையை படித்து இரண்டு நாட்கள் அவரது காமெடியை ஜீரணிக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் அந்த கட்டுரையை அவர் ஒரு வரிகூட தட்டச்சு செய்யாமல் பேப்பரில் முழுவதும் எழுதிக் கொண்டு அதனை வைத்து மற்றொரு கட்டுரையிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக காப்பிபேஸ்ட் பண்ணியது என்று தெரிய வந்ததும் அண்ணனின் சமயோசித அறிவை எண்ணி வியந்தேன்.

இன்று இல்லாவிட்டாலும் பத்து வருடம் கழித்தாவது என் கட்டுரைகளில் அபிஅப்பாவின் சாயல் இருக்கும். அவர் அளவுக்கு நகைச்சுவை என் எழுத்தில் இருக்கும். அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன். ஹாட்ஸ் ஆப் டூ அபிஅப்பா என்னும் தொல்ஸ் அண்ணா.

கொஞ்ச நாளாக அபிஅப்பா நகைச்சுவை கட்டுரைகளை எழுதுவதில்லை. திமுக ஆதரவு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கிறார். அது தான் வருத்தமாக இருக்கிறது. இனியாவது வழக்கம் போல நகைச்சுவை கட்டுரைகளை எழுதி அசத்துவார் என காத்திருக்கிறேன்.

--------------------------------------------------

யார்ரா இவன்.


--------------------------------------------------

காதலில் பிரச்சனை ஏற்பட்டா மனதில் வலி வரும்னு சினிமாவில் கேள்விப்பட்டு இருக்கேன். இது எப்படிடான்னு கிண்டல் பண்ணியும் சிரிச்சிருக்கேன்.

சிறு வயதில் ஒரு பெண்ணை காதலித்து தோல்வியடைந்து, அதனால் பொதுப்பணித்துறை அரசாங்க வேலையை விட்டு விட்டு தண்ணியடித்து வீணாப்போய் ஒரு கட்டத்தில் தெளிந்து இன்று கும்பகோணம் வெங்கட்நாராயணா ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டிருக்கும் என் மாமா காதல் உலகத்துக்கே மிகச்சிறந்த உதாரணமாவார்.

ஆனால் எனக்கு இந்த விஷயம் பட்டுத் தெரிய வேண்டியிருந்தது. என் வூட்டம்மாவிடம் காதலைச் சொல்லி நல்லபடியாக தினம் 500 எஸ்எம்எஸ், குறைந்தபட்சம் 2 மணிநேரம் போனில் அரட்டை என்று போய்க் கொண்டு இருந்தது.

ஒரு நாள் அதற்கு ஒரு வேட்டு வந்தது. ஒரு விஷயத்தில் வாக்குவாதம் பெருகி ஒரு இடைவெளி விழுந்தது. அன்றிலிருந்து 15 நாட்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. அந்த பதினைந்து நாட்களும் நான் பட்ட பாடு இருக்கிறதே, படுத்தால் தூக்கம் வராது. விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பேன். விடியற்காலையில் அசந்து தூங்கிப் போய் வேலைக்கு தாமதமாக போய் திட்டு வாங்குவேன்.

சாப்பிடத் தோணவே தோணாது. பைக் ஒட்டிக் கொண்டு வெளியில் சென்றால் நான் எங்கு செல்கிறேன் என்றே தெரியாது. கவனம் சிதறிப் போய் சிக்னலில் போலீஸிடம் மாட்டிக் கொண்டதும் உண்டு. எவ்வளவு சரக்கடித்தாலும் போதை வராது.

ஆனால் நாலு கிளாஸ் தாண்டியதும் அழுகை மட்டும் வரும். பதினைந்து நாளும் நரகத்தில் இருப்பது போலவே இருந்தது. பிறகு சண்டையே போட மாட்டேன் என்று என் நான்கு தலைமுறை முன்னோர் மேல் எல்லாம் சத்தியம் செய்து தான் சமாதானமானேன்.

ஆனால் இன்று எப்படா ஊருக்கு போவாள் என்று மனது ஏங்குகிறது. எழும்பூரில் ரயில் ஏற்றிவிடும் வரை நல்லவன் வேசம் போட்டு ரயில் கிளம்பியதும் ஒரு ஆப் அடித்து விட்டு என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று கத்தத் தோன்றுகிறது. என்ன வாழ்க்கைடா இது.

-------------------------------------------

நோ கமெண்ட்ஸ்.

----------------------------------------------------------

எவ்வளவோ முறை விமானத்தில் சென்றிருக்கிறேன். ஒரு முறை ஓவராக தண்ணியடித்து விட்டு நினைவே இல்லாமல் பிரியாணி திங்கக்கூட விமானத்தில் ஐதராபாத் சென்று இருக்கிறேன். அப்பொழுது கூட இது போல் ஒரு பரவசம் ஏற்பட்டது இல்லை.

ஆனால் சென்ற வாரம் நடந்த ஒன்னு விட்ட தம்பியின் திருமணத்திற்காக ஊருக்கு செல்ல முன்பதிவு செய்ய முயற்சிக்கும் போது அனைத்து வகுப்புகளும் நிறைந்து விட்டது. முதல் வகுப்பு ஏசி மட்டுமே டிக்கெட் அவைலபிள் இருந்தது.

இது வரை போனதில்லை, சரி முயற்சித்து பார்த்து விடுவோம் என்று டிக்கெட் எடுத்து விட்டேன். முன்பதிவு இல்லாத பெட்டியில் செல்ல எனக்கு கட்டணம் கிடையாது. அல்லது 3வது ஏசியில் முன்பதிவு செய்யவும் கட்டணம் கிடையாது. ஆனால் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் எடுக்க முழுக்காசையும் கட்டியாக வேண்டும். ஒரு டிக்கெட் 1300 ரூவாய். மூன்று முறை பேருந்திலோ அல்லது ஸ்லீப்பர் ரிசர்விலோ போய் வரலாம்.

டிக்கெட் எடுத்ததும் கிளம்பும் நாள் வரை பரவசமாகவே இருந்தது. பார்க்கும் நண்பர்களிடமும், சொந்தக்காரர்களிடமும் இதையே சொல்லிக் கொண்டு இருந்தேன். பந்தாவுக்கு தான் என எனக்கும் தெரியும். டிக்கெட் கிடைத்த பந்தாவை எப்படித்தான் வெளிப்படுத்த முடியும்.

சென்ற வாரம் எழும்பூரில் ரயில் ஏறினேன். ஏறும் போது பயங்கர பெருமிதம். சாதாரணமாக நான் ஊருக்கு செல்ல புறநகர் ரயிலில் ஏறி சென்ட்ரல் வந்து பூங்காவில் ஏறி எழும்பூரில் இறங்கி ஊருக்கு செல்லும் ரயில் பிடிப்பேன்.

அன்று முதல் வகுப்பு ஏசியில் டிக்கெட் எடுத்திருந்ததால் டிராவல்ஸ்ஸில் கார் புக் செய்து 3000ரூவாய் காசு கொடுத்து எழும்பூரில் இறங்கினேன். தெண்ட செலவு என்று எனக்கும் தெரியும் ஆனால் பந்தா யாரை விட்டது.

ரயிலில் ஏறி படுக்கையிலும் படுத்தாகி விட்டது. பெருமையில் தூக்கமே வரலை. ஏசி முதல் வகுப்பு பெட்டி எப்படி தூக்கம் வரும். சில மணிநேரத்திலேயே ஊர் வந்து விட்டது. எனக்கோ சப்பென்று ஆகிவிட்டது. என்னடா இப்பத்தான் ஏறி உக்கார்ந்தோம். அதுக்குள் ஊர் வந்து விட்டது என்று.

ச்சே, அடுத்த முறையாவது நாம் டில்லி போன்ற தொலைதூர ஊருக்கு டிக்கெட் புக் செய்து போவோம். என்று நினைத்தேன். ஆனால் எனக்கு டில்லியில் யாரையும் தெரியாது. சும்மா போய் இறங்கி திரும்ப அடுத்த ரயிலை புடித்து வருவோம் என்று நினைத்தேன். டிக்கெட் புக் செய்ய ஆன்லைனை ஓப்பன் செய்தால் டிக்கெட் விலை 4900 ரூபாய் என்று காண்பித்தது. இந்த கட்டணத்தில் விமானத்திலேயே டிக்கெட் புக் செய்யலாம் என்று தெரிந்தவுடன் சிஸ்டம்மை ஷட்டவுன் செய்து விட்டு தூங்கி விட்டேன்.

இனிமேல் என் பாஸ்(PASS)க்கு எந்த வகுப்போ அதிலேயே பயணிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாதுடா சாமி.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment