எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் டிராபிக் ரூட்டை தெரிந்து கொள்வது
எனக்கு ஒரு ஹாபி போல. திருவாரூரில் இருந்த வரை திருவாரூர், மன்னார்குடி,
மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஊர்களின் வழிப்பாதையை
சந்துபொந்து வரை தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.
கும்பகோணம் மட்டும் விதிவிலக்காக அதிகம் போகாத ஊராக இருந்தது. சென்னைக்கு வந்த பிறகு சிலகாலம் வழிதெரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. சில மாதங்களில் அதையும் தெரிந்து கொண்டேன். இதற்கு கூட ஒரு ஐடியா வைத்திருந்தேன். சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வந்தால் சென்னையில் வழிப்பாதையை தெரிந்து கொள்ளலாம் என்பதே அது.
அதையும் அப்ரெண்டிஸ் சேர்ந்த பிறகு மாலை வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்து மாதக்கணக்கில் சுற்றித் தான் தெரிந்து கொண்டேன். நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் பலஊர்களுக்கு மாற்றலானதால் அந்தந்த ஊர்களில் திரிந்து வழிப்பாதையை தெரிந்து கொள்வது என்னுடைய பெரிய பொழுதுபோக்கு.
பெங்களூர், மதுரை, விருதுநகர், ஐதராபாத், வாரணாசி, டெல்லியில் ஒரு பகுதி, நாகர்கோயில், கொச்சி, நெல்லூர் என பல ஊர்களில் வேலை பார்த்ததால் அந்தந்த ஊர்களில் எங்கிருந்து எங்கு செல்வது என்றாலும் எனக்கு அத்துப்படி.
ஆனால் பலஊர்களில் இதற்காக நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்க்க செல்லும் போது தங்கியிருந்த இடம் கழக்கூட்டம். அங்கிருந்து சாஸ்தாமங்கலம் என்ற ஏரியாவுக்கு செல்வதற்காக கம்பெனியின் பழைய ஸ்கூட்டரில் சக ஊழியருடன் புறப்பட்டேன்.
அது எனக்கான சுக்ரதிசை நாள் என்று தெரியாமல் போய் விட்டது. அந்த ஸ்கூட்டருக்கு ஒரு தன்மை உண்டு. வண்டி புறப்பட்டதும் மூன்று கிலோ மீட்டர் ஒழுங்காக செல்லும் பிறகு கார்ப்பரேட்டர் அடைத்துக் கொள்ளும். மெக்கானிக்கிடம் காட்டி அடைப்பை எடுத்து விட்டால் தான் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும்.
மறுபடியும் மூன்று கிலோமீட்டர் செல்லும். மறுபடியும் கார்ப்பரேட்டர் அடைப்பு, மெக்கானிக் சரிசெய்ய வேண்டும். இந்த கதை எனக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். அந்த சமயம் எனக்கு மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாது.
திருவனந்தபுரத்திற்கும் புதுசு. தட்டுத் தடுமாறி ஒவ்வொரிடமும் வழிகேட்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. கழக்கூட்டத்திற்கும் சாஸ்தாமங்கலத்திற்கும் 17 கிலோமீட்டர். மதியம் சாப்பிட்டு விட்டு புறப்பட்ட நாங்கள் வண்டியை சரிசெய்து சாஸ்தாமங்கலத்திற்கு செல்வதற்கு மாலை ஆறுமணியாகி விட்டது.
வண்டியை அன்று தள்ளி தள்ளி ஏகக்கடுப்பாகி விட்டது. இரவு நெடுநேரம் கழித்து திரும்ப வேண்டியதாகியதாலும் கேரளாவில் ஒன்பது மணிக்கெல்லாம் ஒயின்ஷாப்பை அடைத்து விடுவார்கள் என்பதாலும் ஆபீசில் இருந்த நண்பர்களிடம் ரெண்டு புல் வாங்கி வைக்கச் சொல்லியிருந்து அன்று இரவு முழுவதும் குடித்து தீர்த்து தான் அசதியை போக்க முடிந்தது.
அன்றிலிருந்து நான் கேரளாவை விட்டு திரும்பும் வரை எல்லோரும் எனக்கு சாஸ்தாமங்கலம் என்று பெயரிட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதுபோலவே அந்த ஸ்கூட்டரை நான் கேரளாவை விட்டு செல்லும் வரை தொடவே இல்லை.
1997ல் நான் சென்னைக்கு வந்த புதிதில் என் பெரியப்பா பையன் சதீஷ் "மை இந்தியா" என்ற படத்திற்கு பிரிவியூ இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தான். என்னுடன் என் நண்பன் இந்திரனை அழைத்துக் கொண்டு சென்றோம்.
வழி தெரியாது என்பதால் பெரியார் நகரிலிருந்து எப்படி செல்ல வேண்டும் என்று க்ளாஸ் எடுத்தான். பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் 42 பஸ் பிடித்து பாரிமுனை சென்று அங்கிருந்து சைதாப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி எதிர்பக்கம் சென்றால் ராணிசீதை ஹாலின் பக்கத்து ரோட்டில சென்றால் இந்த பிரிவியூ தியேட்டரை அடையலாம் என்று.
நாங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக பாரிமுனையில் இறங்கி மற்றவர்களிடம் விசாரித்து சைதாப்பேட்டைக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி அந்த இடத்தை விசாரித்து சென்று அடைந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் போல் இருவரும் உணர்ந்தோம்.
இத்தனைக்கும் என்னுடன் வந்த நண்பன் இந்திரன் அக்மார்க் சென்னைக்காரன்.
ஆரூர் மூனா
No comments:
Post a Comment