Sunday 2 August 2015

வாயில சனி - பழசு மார்ச் 2013

மூன்று நாட்களாக திருவாரூர் வாசம் செய்து இன்று தான் சென்னை திரும்பினேன். நான்கு நாட்களாக பதிவு எழுதாததால் இன்று எழுதலாம் என்று உட்கார்ந்தால் மனதில் எதுவுமே ஒடமாட்டேங்குது. எப்படிடா பதிவு தேத்துறது என்று மதியத்திலிருந்து யோசித்து உட்கார்ந்திருந்தேன்.


இதுக்கு மேலயும் உக்கார்ந்திருந்தா வேஸ்ட்டுனு தோணிச்சி. அதான் ஆரம்பிச்சிட்டேன். ஆனால் எப்படியும் சுவாரஸ்யமாக முடிப்பேன்னு மட்டும் நம்புறேன்.

சுற்றுலா பயணிக்கும் பிரயாணிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. எதையும் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணத்திற்கு தேவையான எல்லாப் பொருட்களோடு கிளம்புகிறவன் சுற்றுலா பயணி. எதையும் திட்டமிடாமல் அந்த நேரத்திற்கு உள்ள வாகனத்தில் ஏறி கிளம்புகிறவன் பிரயாணி.

இந்த சனிக்கிழமை கூட திருவாரூருக்கு கிளம்ப வேண்டியிருந்தது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி மாயவரத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். 4 மணி ரயிலுக்கு 3 மணிக்கு சென்றால் போதும் என முடிவு செய்து எழும்பூர் சென்றால் வண்டி ஏற்கனவே பிளாட்பாரத்தில் நின்றது. முன்பதிவில்லாத பெட்டி நிரம்பி வழிந்தது.

ஏறி நின்று விட்டேன். 6 மணிநேரம் தானே நின்றே சென்று விடலாம் என்று முடிவு செய்து ஓரு அழகான பெண் பார்வையில் படுமாறு நின்று கொண்டேன். மாயவரம் செல்லும் வரை பொழுது போக வேண்டுமே.

நேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்தது. வண்டி புறப்படும் போது ஒத்தைக்காலில் தான் நின்றிருந்தேன். எல்லாம் வேலை முடிந்து தாம்பரம், செங்கல்பட்டில் இறங்கும் கூட்டம். இதில் சில பசங்க குடித்து விட்டு வந்து கானா பாட்டு பாடி வந்தனர்.


செங்கல்பட்டு வரை பிதுக்கிய கூட்டம் ஓரளவு குறைந்தது. செங்கல்பட்டில் ஒரு செளராஷ்ட்ரா குடும்பம் ஏறியது. உள்ளே நுழைந்தவுடன் அந்த குடும்பத்து தலைவர் எல்லாரையும் இடித்து தள்ளி விட்டு சத்தம் போட்டுக் கொண்டே நுழைந்தார். பர்த்தில் படுத்திருந்தவர்களை எழுப்பி தன் மகன்களை ஒரு பர்த்திலும் ஏற்றி விட்டு தான் ஒரு பர்த்திலும் ஏறிக் கொண்டார்.

எனக்கோ நின்று நின்று கால் கடுக்க ஆரம்பித்தது. விழுப்புரம் வந்ததும் ஒரு டீயை அடித்து விட்டு கால் வலியோடு நின்றேன். மாயவரத்தில் இறங்கி பேருந்து பிடிப்பதெல்லாம் சாத்தியமில்லாதது என தெரிந்தது. எனவே வீட்டுக்கு போனடித்து காரை மாயவரத்திற்கு அனுப்ப சொன்னேன்.

அப்பொழுது ஒரு சிங்கிள் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி என்னைப் பார்த்து "தம்பி, நீ ரொம்ப நேரமா நின்னுகிட்டு வர்ற. நான் கடலூரில் இறங்கிவிடுவேன். என் சீட்டில் அமர்ந்து கொள்" என்றது.

எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பாட்டியை எப்படியும் கவர் செய்து சீட்டை பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து "பாட்டி நீங்கள் கடலூரில் எங்கு செல்ல வேண்டும் கடலூர் ஓடியா அல்லது என்டியா" என்று கேட்டேன்.

எப்படியும் நான் விவரம் தெரிந்தவன் என்று பாட்டிக்கு புரிய வைத்து சீட்டை பெற வேண்டி விளக்க ஆரம்பித்தேன். "கடலூர் ஓடி என்பது ஓல்டு டவுன் துறைமுகம் அருகில் வரும். என்டி என்றால் நியுடவுன் ஸ்டேசன் பெயர் திருப்பாதிரிப்புலியூரில் நிற்கும்" என்று அடித்து விட்டேன். பாட்டி "தம்பி நான் கடலூர் ஓடிக்கு செல்ல வேண்டும்" என்றது. "நான் சரியான ஸ்டேசன் பார்த்து இறக்கி விடுகிறேன்" என்று சொன்னேன்.

விழுப்புரத்திற்கு அடுத்ததாக திருப்பாதிரிபுலியூரில் தான் நிற்கும் என்று தெரிந்ததால் "அடுத்த ஸ்டேசன் தான் பாட்டி கடலூர் ஓடி" என்றேன். பாட்டி பெருந்தன்மையுடன் "ஒரு ஸ்டேசன் தானே நான் நின்று கொள்கிறேன், நீ ரொம்ப நேரமாக நிற்கிறாய் உட்கார்" என்று இருக்கையை விட்டு எழுந்தது.

நான் இருக்கையில் அமர்ந்து குனிந்து பார்த்தால் ஸ்டேசன் பெயர் நெல்லிக்குப்பம் என்று போட்டிருந்தது. முதல் பல்பு எனக்கு. பாட்டியிடம் "சாரி பாட்டி தவறுதலாக சொல்லி விட்டேன். இன்னும் ஒரு ஸ்டேசன் போக வேண்டும், அதுவரை உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்றதும் சிரித்து கொண்டிருந்த பாட்டி லைட்டாக முறைத்துக் கொண்டு "பரவாயில்லை நீ உட்காரு" என்றது.

அப்பாடா தப்பித்தேன் என்று உட்கார்ந்தேன். திருப்பாதிரிபுலியூர் வந்ததும் ரயிலில் இருந்து பலர் இறங்கினர். அப்போது கூட நான் பாட்டியிடம் "அடுத்த ஸ்டேசனில் நீங்க இறங்க வேண்டும்" என்றேன். மறுபடியும் பாட்டி சிரித்தது.

திருப்பாதிரிபுலியூரில் இருந்து வண்டி கிளம்பியதும் கதவருகே கூட்டத்துடன் நின்றிருந்த பாட்டி திரும்பி வந்து "வண்டி கடலூர் ஓடியில் நிற்காதாம்ல" என்றது. எனக்கு வயித்தை கலக்க ஆரம்பித்தது. நான் போனில் திருவாரூர் ஸ்டேசனில் தொடர்பு கொண்டு கேட்டால் ஆமாம் வண்டி இப்போதெல்லாம் கடலூர் ஓடியில் நிற்பதில்லை என்று தகவல் வந்தது.

மாட்னேண்டா என்று நினைத்து "பாட்டி சிதம்பரத்தில் தான் அடுத்தது வண்டி நிற்கும், அங்கிருந்து பேருந்து பிடித்து கடலூர் ஓடி செல்லலாம்" என்று சொன்னதும் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தது.

மறுபடியும் இருக்கையை விட்டு எழுந்து நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்த பாட்டி என்னைப் பார்த்து திட்டிக் கொண்டே வந்தது. ரயிலில் இருந்த பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அவமானமாகிப் போய் அங்கிருந்து நகர்ந்து கக்கூஸின் அருகில் நின்றவாறே மாயவரம் வரை பயணித்தேன். எனக்கு அன்னைக்கு பார்த்து வாயில சனி போல, ஒரு வேளை ஒன்பதுல குரு பார்த்த எபெக்ட்டா இருக்குமோ.

 
ஆரூர் மூனா

1 comment: