அபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் சீன் ஆர்டரை மாத்தி போட்டு அதில் குள்ள கமல்ன்ற மேஜிக்குக்கு பதில் ஆவிகள் கண்ணுக்கு தெரியிது என்கிற மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு நமக்கு காதுல பூ சுத்தி வழங்கப்பட்டு இருப்பதே மாஸ் என்கிற மாசு.
நாம மாஸ் படத்தின் ஆர்டரிலேயே கதையை சொல்லனும் என்றால்
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சூர்யா ஒரு சிக்கலில் மாட்டி அதனால் ஒரு விபத்தில் சிக்குகிறார். அதன் பிறகு அவர் கண்களுக்கு ஆவிகள் தெரிய ஆரம்பிக்கிறது. அதை வைத்து காசு சம்பாதித்து ஜாலியாக இருக்கும் போது ஒரு வீட்டில் சூர்யா போன்ற ஆவியை சந்திக்கிறார் சூர்யா. அதன் பிறகு அந்த ஆவிக்காக தவறுதலாக ஒரு கொலையை விபத்தாக்கி செய்கிறார்.
யார் அந்த ஆவி, சூர்யாவுக்கும் இன்னொரு சூர்யா ஆவிக்கும் என்ன உறவு வில்லன்கள் யார் என்பதை நமக்கு சொல்லியிருக்கும் படமே மாஸ்.
கத்தி படத்திலும் இந்த தவறு தான் நடந்தது. படத்தின் மெயின் கதைக்கு ஆரம்பத்திலேயே வராமல் கண்ட இடங்களில் அலைந்து திரிந்து இன்டர்வெல் டைம்ல மெயின் கதைக்கு வருவது. இது அவுட் ஆப் பேஷன் ஆகி ரொம்ப நாள் ஆகிப் போச்சி.
இந்த படத்திலும் சின்ன திருட்டுகள் நயன்தாராவுடன் காதல், மற்ற ஆவிகளை வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்தல் போன்ற கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களே முன் பாதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
ஆவி சூர்யா அறிமுகமான பிறகு தான் படத்தின் கதையே தொடங்குகிறது. இது படத்தினுள் நம்மை ஒன்ற விடாமல் செய்து விடுகிறது.
இதற்கிடையில் மெட்ராஸ் பவன் சிவா படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு மெசேஜ் அனுப்பினார். இந்த படம் The Frighteners என்ற ஆங்கிலப் படத்தின் காப்பியாம்.
நமக்கு இப்பல்லாம் தமிழ்ப்படம் பாக்குறதுக்கே நேரமில்லை. நாம எங்க இங்கிலீஷ் படம் பாக்குறது. எனவே எனக்கு படம் பார்த்து முடியும் வரை இந்த காப்பி சமாச்சாரமெல்லாம் தோணவேயில்லை.
சூர்யா வழக்கம் போல நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண் ஆவியின் வேண்டுகோளுக்காக ஆவியின் கண் தெரியாத மகனுக்கு உதவும் காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து இருக்கிறார். அந்த இலங்கைத் தமிழன் கதாபாத்திரமும் டயலாக் டெலிவரியும் நான் அறிந்த வரையில் மோசமில்லை என்றே தோன்றுகிறது.
நயன்தாரா இந்த படத்திற்கு எதற்கு என்றே தெரியவில்லை. படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் உதவாத கதாபாத்திரம். நாயகி வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் கட்டாயத்திற்காக நடிக்க வைக்கப் பட்டுள்ளார்.
ப்ரணீதா ப்ளாஷ்பேக் காட்சியில் வருகிறார். அந்த மரணம் சம்பவிக்கும் காட்சியில் ஒகே ரகம் தான்.
வழக்கம் போல இந்த படத்திற்கு இவர் எதற்கென்றே தெரியாத ப்ரேம்ஜி. அவர் செத்து இருப்பதாக சூர்யா அறிந்து ஓடும் காட்சியில் மட்டும் தனித்து தெரிகிறார். க்ளைமாக்ஸில் ஒரு இடத்தில் கவனிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை.
பார்த்திபன் சில இடங்களில் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். அவ்வளவு தான், மற்ற இடங்களில் மொக்கை போடுகிறார்.
சமுத்திரக்கனி வில்லன் என்றதும் எதாவது வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ப்ச். சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இலங்கைத் தமிழன் என்பது கூட வியாபார தந்திரம் தான்.
முதல்பாதி கடியைக் கொடுத்தாலும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் கொடுப்பதால் படம் மயிரிழையில் தப்பிக்கிறது. வெங்கட் பிரபு டீம் என்ற பெயரில் எல்லா ரெகுலர் நடிகர்களையும் நுழைக்காமல் வெளியில் இருந்து ஸ்ரீமன், கருணாஸ், RMSK (குமார்) என ஆட்களை எடுத்திருப்பதே பெரிய ஆறுதல் தான்.
பார்க்காவிட்டால் தப்பில்லை. பார்த்தாலும் முதலுக்கு மோசமில்லை.
ஆரூர் மூனா