Friday 8 May 2015

இந்தியா பாகிஸ்தான் - சினிமா விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ இந்து முஸ்லீம் காதல் கதை போல இடையே தீவிரவாதம் எல்லாம் இருக்கும் போல என்று நினைத்து ஏமாந்து போனேன். அப்படி ஒரு நிழல் கூட இந்த படத்தில் இல்லை.


எந்த நேரமும் இந்தியா பாகிஸ்தான் போல முட்டிமோதி உரசிக் கொண்டே இருக்கும் நாயகன் நாயகியைப் பற்றிய கதை என்பதால் இந்த தலைப்பாக இருந்திருக்க கூடும்.

விஜய் ஆண்டனி ஒரு வழக்கறிஞர். அவர் ஒரு அலுவலகம் அமைக்க வேண்டி ஒரு இடத்தை பார்க்க புரோக்கர்களின் ஏமாற்றுதலால் ஹீரோயின் உடன் அந்த அலுவலகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இருவரும் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். ஆனால் ஈகோவால் எந்த நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இருவருமே வக்கீலாக இருப்பதால் யார் முதலில் கேஸ் பிடிக்கிறார்களோ அவர்கள் அந்த அலுவலகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மற்றவர் வெளியறே வேண்டும் என்ற சவாலுடன் கேஸ் பிடிக்க அலைகின்றனர். 


அவர்கள் கேஸ் பிடித்தார்களா, அவர்கள் காதல் என்னவானது என்பதே இந்தியா பாகிஸ்தான் படத்தின் கதை.

இந்த கதை 90களில் வந்திருந்தால் ஒரு வேளை செம ஹிட் அடித்திருக்கக் கூடும். காட்சியமைப்புகள் முதல் காமெடி வரை எல்லாமே 90களின் காலக்கட்டத்தை ஒத்தே இருக்கிறது.

என் சிறுவயதில் பட்டணத்தில் பெட்டி என்றொரு படம் பார்த்தேன். ஒரு சூட்கேஸை யார் திறந்தாலும் மூஞ்சிலேயே குத்தும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு புதையலுக்கான மேப் இருக்கும். கவுண்டமணி, செந்தில், பாண்டு, விகேராமசாமி, சார்லி என நகைச்சுவை பட்டாளமே அந்த படத்தில் நடித்திருக்கும். எனக்கு ரொம்ப காலத்திற்கு ஒரு சிறந்த நகைச்சுவை படமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றே நினைத்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த படத்தை மறுக்கா பார்க்கும் போது தான் தெரிந்தது என் டேஸ்ட்டின் லட்சணம். படம் அப்படியான ஒரு சூரமொக்கை.


எதற்கு அந்தப் படத்தை இப்போ சொல்கிறேன் என்றால் இந்தியா பாகிஸ்தான் படம் பார்க்கும் போது எனக்கு அந்த படம் தான் நினைவுக்கு வந்தது.

ஜெகனின் அறிமுகக் காட்சியான அந்த ஹோட்டல் சீனிலேயே படத்தின் காட்சிகள் எந்த லட்சணத்தில் இருக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்து விடுகிறது.

எனக்கு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்கள் ரொம்பவே பிடிக்கும். அந்த படத்தின் கதையமைப்பே நாயகன் இறுக்கமாக இருப்பது போல் இருப்பதால் அவர் அட்டகாசமாக பொருந்திப் போவார். ஆனால் இந்த படத்திலும் அதே போல் முகத்தை வைத்துக் கொண்டு இருந்தால் எப்படி செட்டாகும். இந்த கதைக்கு நாயகன் ஸ்லாப்ஸ்டிக் காமெடி செய்யனும். தலைவன் எவன் எங்க போனா எனக்கென்ன என்ற ரேஞ்சிலேயே முகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்.


ஒரே மாதிரி நடிப்பதே போரடித்து விடும். ஒரே மாதிரி முகபாவம் இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும். சற்று முயற்சித்து தங்கள் நடிப்புத்திறனை முன்னேற்றிக் கொள்ளுங்கள், தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமிருந்தால்.

நாயகியாக அறிமுகம் சுஷ்மா ராஜ். நடிக்க நிறைய ஸ்கோப் இருந்தும் சுமாராக ஸ்கோர் செய்கிறார். காமெடி காட்சிகளில் எடுபடவே இல்லை. பார்க்க நன்றாக இருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

படத்தில் நகைச்சுவைக்கு பிரதான பொறுப்பேற்று இருப்பது எம்.எஸ். பாஸ்கர், பசுபதி, மனோபாலா, ஜெகன், காளி.

சில பல காட்சிகளில் வாய் விட்டு சிரிக்கிறோம் என்றால் அதற்கு முழு காரணம் எம்.எஸ். பாஸ்கர் தான். மனிதர் ஒரு சகுனப் பிரியராக வருகிறார். எந்த செயல் செய்ய வேண்டும் என்றாலும் கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும் என கண் மூடி பிராத்திப்பதும் எங்கோ செல்போன் ஒலிக்க அதை கடவுளின் ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்க சிரிப்பலை அள்ளுகிறது அரங்கில்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழக்கும் மனோபாலா எம்.எஸ். பாஸ்கரின் வேண்டுகோள் நீண்டு கொண்டே செல்ல பொறுமையிழந்து தானே கையில் உள்ள மணியை அடிக்கும் காட்சி பலே.

காளி அடக்கி வாசிக்கிறார். அந்த காபி போடும் சீனில் மட்டும் சிக்ஸர் விளாசுகிறார்.

படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வருவது ஜெகன் தான். ஆனால் மனிதர் போரடிக்கிறார். கனெக்ஷன் நிகழ்ச்சியில் வருவது போலவே படத்திலும் பேசிக் கொண்டே இருக்கிறார். 

படம் பார்க்க போயே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. வெயிலுக்கு நல்ல ஏசி தியேட்டரில் ஒதுங்க நினைத்தால் போய் வாருங்கள். இல்லையென்றால் ஒரு விழா தினத்தன்று சின்னத்திரையில் முதன் முறையாக என்று எந்த டிவியிலாவது போடுவான். அப்போ பார்த்துக் கொள்ளலாம்.

ஆரூர் மூனா

6 comments:

  1. சுமார்தானா

    ReplyDelete
  2. dear Mr.Senthil,
    i want to have your uthama villan review.I am fan of ur writing slang.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க. நான் உத்தம வில்லன் பார்க்கும் எண்ணத்திலேயே இல்லைங்க. இரண்டு முறை முன்பதிவு செய்தும் படத்தை பார்க்க முடியவில்லை. அதன் பிறகு இரண்டு முறை முயற்சித்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டு விட்டேன்.

      Delete
  3. ம்ஹீம்... சின்னத்திரையில் தான்...!

    ReplyDelete